நீலகிரி வயநாடு


நீலகிரி-வயநாடு அல்லது தென்கிழக்கு நீலகிரி என்றெல்லாம் அறியப்பட்ட கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காகளில் அமைந்துள்ள நீலகிரி மலைத்தொடரின் இப்பகுதி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு அடர்த்தியானகாடுகளும், பல்லுயிர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களும், இவைகளோடு இணைந்து வாழ்ந்த பழங்குடியினமக்கள் என அமைதியாய் இருந்த குறிஞ்சிநிலம்.

இப்பகுதியின் நிலப்பரப்பு, மக்களின் வாழ்க்கைசூழல், உணவு பழக்கவழக்கங்கள், மன்னர்களின் ஆட்சி, ஆங்கிலேயர்களின் வருகையையொட்டி உருவான பணப்பயிர் தோட்டங்கள், மானிடஇடப்பெயர்ச்சி, அதனால் விளைந்த பருவமாற்றங்கள், வாழ்வியல் போராட்டங்கள் என இவ்விடத்தின் பெரும்பாலான நிகழ்வுகள் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்தது. ஆயினும் இப்பகுதியின் வரலாறும், சான்றுகளும் மிக குறைவாகவே ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது. பழமொழிகள் மற்றும் வாய்மொழிகதைகள் பல இருப்பினும் தரவுகளை மட்டும் அடிப்படையாக கொண்டு வரலாற்றை பதிவு செய்யும் முயற்சியே இது.

குடியேற்றத்தின் துவக்கக் காலங்களில் கூடலூர், தேவாலா மற்றும் பந்தலூர் பகுதிகள் நீலகிரி வயநாட்டின் முக்கிய தலங்களாக இருந்தன.

18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பந்தலூரில் நீதிமன்றம், குதிரைபந்தையமைதானம், குடியிருப்புவளாகம், ராணுவமுகாம், காவல்நிலையம் மற்றும் அங்காடிகள் ஆகியவை இருந்தது. பணப்பயிர் தோட்டங்கள் மற்றும் சுரங்கங்களினால் உருவான புதிய வேலைவாய்ப்புக்கள், பஞ்சத்தின் காரணமாக அன்றைய சென்னை மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து தமிழ், மலையாள மற்றும் கன்னடமக்களின் இடப்பெயர்ச்சி ஆகியவற்றின் தொடர்ச்சியாகத்தான் இன்றும் முக்கிய அரசு அலுவகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பந்தலூரில் இருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது.

உலகில் உள்ள அதிக பல்லுயிர்ப் பெருக்க பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையும் இடம் பெறுகிறது.

1986ஆம் ஆண்டு யுனஸ் கோவால் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உயிர்க்கோள்காப்பகம் நீலகிரி மலைதான். சுமார் 5560ச.கி.மீ பரப்பளவுடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் என மூன்று மாநில எல்லைப்பகுதிகளை உள்ளடக்கிய இந்த உயிர்க் கோளகாப்பகத்தில் முட்பதர்காடு, வறண்ட இலையுதிர்காடு, பசுமைமாறாக்காடு, மலைக்காடுகள், சோலைவனம், புல்வெளிகள் மற்றும் ஈரப்புலங்கள் என பல்வகைக்காடுகள் காணப்படுகிறது. இந்த உயிர்க்கோள் காப்பகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் பந்தலூரிலும் இவ்வகை காடுகளை காணமுடியும். நீலகிரி வரையாடு, நீலகிரிமந்தி, தேவாங்கு, மலபார் மலை அணில், வெளிமான், புலி, குரைக்கும்மான், காட்டெருமை மற்றும் ஆசிய யானை போன்றவை பொதுவாக காணப்படும் விலங்குகள் ஆகும். கொண்டைக் குருவிகள், ஈப்பிடிப்பான்கள், சில்லைகள், சிட்டுகள், காகங்கள், மரங்கொத்திகள், வானம்பாடிகள், பஞ்சரட்டைகள், கிளிகள், காட்டுக்கோழிகள், குண்டு கரிச்சான், நீலகிரி காட்டுப்புறா, பல வகை சின்னன்கள், ஒற்றை இருவாயன், கருப்பு வெள்ளை இருவாயன் மற்றும் தமிழகத்தின் மாநிலப் பறவையான மரகதப்புறா போன்ற பறவையினங்களை இங்கு காணமுடியும். காட்டுமா, வெள் அகில், ஈட்டி, வெண்தேக்கு, வேங்கை, இருள், சிலைவாகை, நாவல், பலா மற்றும் தோதகத்தி போன்ற மரங்கள் நிறைந்த பகுதி.

பூ மரம் மற்றும் சில்வர் ஓக் மரங்கள் மானிட இடப்பெயர்ச்சியினால் இந்த பகுதிக்கு அறிமுகமானது. பல்வேறு மூலிகைகளும், மிளகு போன்ற கொடிகளும், மிகுந்து காணப்படுகிறது. நீல கிரியின் சிறப்பம்சங்களுள் ஒன்றான, 12வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப்பூவை இங்கு காணமுடியும்.

ஏலம், காப்பி, மிளகு, இஞ்சி மற்றும் கோகோ போன்ற பணப்பயிர்கள் இங்கு பயிரிட்டாலும் பெரும் பகுதி தேயிலைத் தோட்டங்களால் நிறைந்துள்ளது. குறு மற்றும் பெருவிவசாயிகள், தோட்டத்தொழிலாளர்கள், தொழிற்சாலைகள், அதனைசார்ந்து இயங்கும் தொழில்கள் என தேயிலை இந்த பகுதியின் பொருளாதாரவளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மலைகள், குன்றுகள் என எங்கு பார்த்தாலும் தேயிலைத் தோட்டங்கள், அதனிடயே தொழிலாளர்களின் குடியிருப்புக்கள், தோட்டங்களை ஒட்டியபபுல்வெளிகள், அதன் தொடர்ச்சியாக அடர்ந்த சோலைக்காடுகள், அதிலிருந்து வரும் சில்லென்ற காற்று, மலையிடுக்கு களில் பாய்ந்து கொட்டும் அருவிகள், மலை முகடுகளை தொட்டுதவழும் முகில்கள், அவ்வப்போது பொழியும்மழை, இவை களைசார்ந்து வாழும்பல்லுயிரினங்கள் என இப்பகுதி இயற்கையின் தொட்டிலாக இருக்கிறது என்றால் மிகையாகாது.

எனினும் தேயிலைத் தோட்டவேளாண்மை, வேட்டையாடுதல், கட்டுமானப்பணிகள், ஆக்கிரமிப்புகள் மற்றும் காட்டுத்தீ போன்ற காரணங்களால் வனங்கள் அழிக்கப்படுவதோடு, மண் வளம் மற்றும் பல்லுயிர்களின் உணவுச்சங்கிலி பாதிப்படைந்த வண்ணம் உள்ளது. மனிதர்களின் இத்தகுவரம்பு மீறல்கள் தான் பல இயற்கை சீற்றத்திற்கும், தட்பவெட்ப நிலை மாற்றத்திற்கும் பெரும் காரணமாக அமைகிறது.