யானைகளை பற்றி நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்

Posted by Admin on 10-01-2021 12:27:15 AM

நாம் காடுகளுக்கு நடுவே அமைந்த ஊரில் வாழ்கிறோம். நம்மில் பலபேர் காடுகளில் தான் வசிக்கிறோம். குறிப்பாக உலகிலேயே சிறப்பு வாய்ந்த பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த மேற்குத்தொடர்ச்சி மலையின் தொடர்ச்சி தான் நம்முடைய நீலகிரி. நாம் கிட்டத்தட்ட தினமும் யானைகளையோ அல்லது யானைகள் பற்றிய செய்திகளையோ பார்த்துக்கொண்டே வருகிறோம். அதனால் யானைகளை பற்றி நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம் என கருதுகிறேன்.
நாம் இன்று காணும் யானை அதன் மூதாதையர்களாக கருதப்படும் Proboscidea எனும் பேரினத்தின் தொடர்ச்சியாகும். அது சுமார் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவை. ஒரு யானை தினமும் குறைந்தபட்சம் 70 கிமீ நடக்க வேண்டும். 100-150 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். 200-250 கிலோ உணவை உண்ண வேண்டும். அப்பொழுதுதான் யானை அதன் சராசரி வாழ்க்கையை வாழ்கின்றது என அர்த்தம். ஒரு யானை தன் வாழ்நாளில் சுமார் 18,25,000 மரங்கள் வளர காரணமாக இருக்கின்றது. அப்படிப்பட்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த விலங்கு யானை. யானையைப் பற்றி தெரிந்து கொள்வதை போல, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான மனிதரை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவர் தான் ‘யானை டாக்டர்’ கிருஷ்ணமூர்த்தி. நீங்கள் முதுமலை யானை காப்பகத்தில் உள்ளவர்களையோ அல்லது அங்கிருக்கும் யானைகளையோ அல்லது நம் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் வயதான யானையையோ கேட்டால் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆம்..அவரைப்பற்றியும் அவரோடு உறவாடிய நம் முதுமலை யானைகள் பற்றியும் அறிந்து கொள்ள ஆவல் கொண்டவர்கள் கேட்க, காணொளியை இணைத்துள்ளேன். இந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய சிறுகதை தற்போது பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்று இருக்கிறது. அனைவரும் குடும்பத்துடன் கேட்க வேண்டிய ஒரு முக்கியமான காணொளி. புத்தகம் படிப்பவர்களுக்கு pdf வடிவில் தேவைப்பட்டால் பதிவிடுங்கள். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள் .. விவாதிப்போம்.
-சந்திரசேகர்