நீ உண்ணும் ஒவ்வொரு பருக்கையிலும் உன் பெயர் எழுதப்பட்டிருக்கிறது

Posted by test on 23-04-2021 10:25:40 PM

தென்கிழக்கு இந்தியாவின் மலைப்பிரதேசம், பல்லுயிர்கள் நிறைந்த அடர்ந்த வனம், ஆங்காங்கே ஊற்றெடுத்து வெள்ளைத் திரியாய் தொங்கும் அருவிகளும், மிகையான குளிர்ச்சியும், மிதமான வெப்பமும், நிறைவான மழையளவும், போதாக்குறைக்கு தங்கம் புதைந்து கிடக்கிற பூமி. தேயிலை, காபி போன்றவை விளைய ஏதுவான பள்ளத்தாக்குகள் கொண்ட இந்த பகுதியைத்தான் ஆங்கிலேயர்கள் தங்கள் உற்பத்தி கிடங்காகவும், அதன்மூலம் வருவாயை பன்மடங்கு பெருக்க, காடுகளை அழித்துத்தோட்டங்களை உருவாக்கிக்கொண்டிருந்த நேரம் அது.
இப்படிப்பட்ட செழிப்பான நிலப்பரப்பில் உணவில்லாமல் மக்கள் செத்து மடிந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அதற்கு நாம் கொஞ்சம் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.
1874 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்படுகிறது. 1876 ஆம் ஆண்டு விக்டோரியா இந்தியாவின் ராணியாக பொறுப்பேற்பதற்கான ஆயத்தபணிகளை துவக்கியது இங்கிலாந்து அரசு. அந்த வருடம் இந்தியாவில் பருவமழை பொய்த்து போனது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த அதிக மழையினால் கோலார் மற்றும் பெங்களூர் பகுதிகளில் விளைந்திருந்த ராகி பயிர் முற்றிலுமாக நாசமாகிவிட்டது. உணவு தட்டுபாடு மற்றும் ஊட்டசத்து குறைபாட்டினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதோடு காலாரா, வயிற்றுப்போக்கு, சின்னம்மை போன்ற வியாதிகள் பலி எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. ஆனால் அரசாங்கம் மிக சொற்பமான தொகையை நிவாரணநிதியாக அறிவித்தது.
1877 சனவரி 1, விக்டோரியா இந்தியாவின் அரசியாக பதவியேற்கிறார். இந்த ஆண்டும் பருவமழை ஏமாற்றவே உணவு தட்டுப்பாடு அதிகமாகிறது. தானியங்களின் விலை இருமடங்காய் உயர்ந்ததன் விளைவு, பலர் தங்கள் கால்நடைகள் மற்றும் நிலங்களை விற்கவேண்டி வந்தது. ‘புதிதாய் வந்த மகராசியின் நேரம் சரியில்லை’ என நம்மவர்கள் தூற்றியிருக்கக்கூடும். மகாராணியின் பதவியேற்பு விழா வெகுவிமர்சியாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. 68000 பேருக்கு பிரமாண்டமான விருந்து சுமார் ஒருவார காலம் நடைபெற்றது.
இதே ஆண்டில்தான் அளவுக்கு அதிகமான உணவுதானியங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. (கிட்டத்தட்ட 1 மில்லியன் டன் அரிசியும், 3 லட்சம் டன் கோதுமையும்). உணவுத்தட்டுப்பாட்டின் பாதிப்பு பற்றி சிறிதும் கவலைப்படாமல் இதையெல்லாம் செய்துகொண்டிருந்தார் அப்போதைய வைசிராய் லார்ட் லிட்டன். இந்த இரண்டு ஆண்டுகளில் (1876-1877) மட்டும் 55 லட்சம் பேர் உணவுப்பஞ்சத்தால் பலியாயினர்.
ஆங்காங்கே காடுகளை வல்லுறவு செய்து சிதைத்து கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் சிலபல கம்பெனிகளில் (தங்கச்சுரங்கங்கள், தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் இதில் அடக்கம்) மெலிந்த தேகத்துடன் மிஞ்சியிருக்கும் உடலை வருத்தி உழைத்துக்கொண்டிருந்தனர் இந்த தேசத்தின் புதல்வர்கள். வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தோட்டவேலைகள் மற்றும் சுரங்கப்பணிகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் சமவெளி பகுதியிலிருந்து மக்கள் வேலைதேடி பெருமளவில் மலைப்பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்தனர். வேலை கிடைக்காதா, அதில் ஒருவேளை பசியாற மாட்டோமா என தோட்டம் தோட்டமாய் அலைந்துகொண்டிருந்தனர்.
தென்மேற்குப் பருவமழையின் துவக்ககாலம். ஏற்கெனவே பெய்த மழையில் நனைந்திருந்தன மரங்களும், தரையில் கிடந்த சருகுகளும். மரங்களின் கிளைகளிலும், அதில் ஒட்டுண்ணியாய் படர்ந்திருந்த கொடிகளிலும் தொங்கியபடி அங்குமிங்கும் தாவிக்கொண்டிருந்தன கூட்டுக்குடும்பமாய் வாழும் கருமந்திகள் . மழையின் வருகைக்கு இசைவு தருவதுபோல தலையை வேகமாக ஆட்டியபோது இலைகளோடு குலுங்கிய மரங்கள் உண்டாக்கிய 'சோஓஓ' என்ற ஒசையும், கிளைகள் ஒன்றோடொன்று உராய்ந்து எழுப்பிய 'க்ரிச் க்ரிச்' சத்தமும், பறவைகளின் கூச்சலும், காட்டுப்பூச்சிகளின் பெரும் அதிர்வலைகள் கொண்ட ரீங்காரமும் ஏதோ பெருந்துயரத்தின் முன்னறிவிப்பாக ஒலித்துக்கொண்டிருந்தது.
அப்போது தலையில் தொப்பி, கையில் தடி, முழங்காலைத்தொடும் கம்பளியால் ஆன மேலாடை, முட்டிவரை அணிந்த காலணி என மிடுக்கான தோற்றத்துடன் தன் காபித்தோட்டத்தின் பணிகளை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார் அந்த ஆங்கிலேயர்.
மழை வருவதற்குமுன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என எண்ணியபடி சரிவான அந்த மலைப்பாதையில் மூச்சிறைக்க வேகமாக நடக்கிறார். வழியெங்கும் புதிதாய் முளைத்த வெளிர்பச்சை பூஞ்சைகள் வெல்வெட் துணியை விரித்தது போல இருந்தது. அதில் வழுக்கி விழாமல் இருக்க தன் கைப்பிடியை அழுத்தமாக நிலத்தில் ஊன்றியபடி கவனமாக சென்றவண்ணம் இருந்த அந்த கணத்தில், மின்னலும் இடியுமாக வானம் தன்வசமிருந்த மழையை கொட்டித்தீர்க்க ஆரம்பித்தது. மழை தொடர்ந்து பெய்ததில் பாதையெங்கும் வெள்ளம். அவரால் நடக்க இயலவில்லை. சற்றுதூரத்தில் ஒரு குடிசை தென்படவே, அங்கு சிறிதுநேரம் நின்றுவிட்டு போகலாம் என அக்குடிசையை நோக்கி விரைகிறார். மழைநீர் உடல்மேல் படாதவாறு குடிசையோடு ஒட்டியபடி நிற்கிறார். மழைத்துளி ஒவ்வொன்றும் தோட்டாக்களாக மாறி துளைத்துக்கொண்டிருந்தது குடிசையின் கூரையை. பட்பட் என்ற அந்த சத்தம் அவர் காதில் இடியாய் இறங்கியது. ஆனால் குடிசையில் பேரமைதி. அப்போது குடலைப்பிரட்டும் அளவுக்கு துர்நாற்றம் வர மூக்கை கையால் பொத்திக்கொண்டார். என்னவாயிருக்கும் என்ற அச்சத்தில் சந்தேகத்துடன் தன் கைத்தடியால் கதவை மெல்ல திறக்க அழுகிய நிலையில் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பிணத்தின் வாடை அவரை அங்கு நிற்பதற்குகூட அனுமதிக்கவில்லை. உடனே அங்கிருந்து கிளம்பி காவல்துறைக்கு தகவல் கொடுக்கிறார்.
அவர்கள் வந்து குடிசையை திறந்துப்பார்த்ததும் உறைந்து போயினர். ஒரு குடும்பமே இறந்து கிடந்தது அதுவும் அழுகி சிதைந்த நிலையில். மொத்தம் ஆறு பேர்.
பஞ்சம் பிழைக்க வந்த குடும்பம் பசியால் உணவின்றி இறந்திருப்பதை ஏற்கமுடிகிறதா? மருதநில மாந்தர்களை குறிஞ்சியும் முல்லையும் ஏனோ ஏற்கவில்லை. உடல்கூறு ஆய்வுக்காக அழுகிய சடலங்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். அதன் அறிக்கையும் அதையே உறுதி செய்கிறது. இத்துயர சம்பவம் நடந்தது அன்றைய வயநாட்டின் தென்கிழக்கு பகுதியில்.
அதே மாதத்தில் வயநாடு கணவாய் வழியாக பயணம் செய்கிறார் ஒருவர். வழியெங்கும் 29 பிணங்களை கண்டதாக குறிப்பிடுகிறார். ஆக இந்த 35 பேரும் தங்களை 55 லட்சம் பேர் பட்டியலில் இணைத்து கொண்டனர்.
ஓர் உயிர் படைக்கப்படும்போதே அதற்கான உணவும் படைக்கப்பட்டுவிடுகிறது; நீ உண்ணும் ஒவ்வொரு பருக்கையிலும் உன் பெயர் எழுதப்பட்டிருக்கிறது; என்பது உண்மையெனில் இவர்களுக்கான உணவு எங்கே போயிற்று?
இவர்களின் பெயர்கள் அதில் எழுதப்படவில்லையா?
அவர்களுக்கான உணவை களவாடியது யார்?
இரண்டாம் பத்தியை மீண்டும் படியுங்கள்..
- சந்திரசேகர்
நன்றி: Afasja Jajy